பீஜிங்: சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சீனாவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 454 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது இதில் 25,517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சீனாவில் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக ஒரு நாள் பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஜீரோ கோவிட் என்ற இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், கரோனா வீரியம் குறைந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சீனாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலை அமைந்துள்ள செங்சோவ் பகுதியில் போலீஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் போராட்டம் வெடித்தது. கரோனாவால் விடுப்பில் சென்றவர்களுக்குப் பதிலாக வேறு பணியாட்களை நியமிக்கக் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது.