நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவைச் சிகிச்சை -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
குறைபாடுடன் பிறந்த குழந்தை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25)- கார்த்திகா(23) தம்பதியினர் 2018ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி கார்த்திகாவிற்கு கடந்த (2021)ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
image
அப்போது குழந்தைக்கு நாக்கு சரிவர வளராமல் இருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பெயரில், அதே நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து 3நாட்களுக்கு பின்னர் குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்து, பின்னர் ஒரு ஆண்டு கழித்த பின் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவைசிகிச்சை
ஓராண்டு முடிந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவந்து, பல்வேறு பரிசோதனைகளை செய்த பின்னர் நேற்று காலை நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக குழந்தையை மருத்துவர்கள் அழைத்துசென்றுவிட்டு திரும்ப கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கூறிய போது, அவசர அவசரமாக குழந்தையை மீண்டும் அறுவைசிகிச்சைக்காக அறைக்கு அழைத்துசென்று மீண்டும் நாக்கில் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
image
பிறகு மருத்துவர்களிடம் ஏன் பிறப்புறுப்பில் ஆப்ரேசன் செய்தீர்கள் என கேட்டபோது, அவசர சிகிச்சை என்பதால் கேட்காமல் ஆப்ரேசன் செய்துவிட்டோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை அஜித் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல்நிலையத்தில் விசாரணை நடத்தகோரி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் தந்தை விளக்கம் கேட்டபோது மருத்துவமனை முதல்வரும் குழந்தையின் உடல்நலன் கருதி அவசரத்திற்காக கேட்காமல் அறுவைசிகிச்சை செய்துவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக சைல்டு லைன் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாங்கள் யாரை தான் நம்புவது- குழந்தையின் தந்தை வேதனை
image
இது குறித்து பேசிய குழந்தையின் தந்தை அஜித், எனது குழந்தைக்கு நாக்கில் பிரச்சனை இருந்ததால் வறுமையின் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தோம். கடந்த 3 நாட்களாக பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்ட போதும் கூட நாக்கில் மட்டுமே தான் பிரச்னை எனக்கூறினார். ஆனால் திடீரென எதற்கு பிறப்புறுப்பில் அறுவைசிகிச்சை செய்தார்கள் என்பதே தெரியவில்லை. எனது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பி வந்தால், இது போல அலட்சியமாக செயல்பட்டால் நாங்கள் யாரை தான் நம்புவது என வேதனையோடு தெரிவித்தார்.
சுன்னத் தான் செய்யப்பட்டுள்ளது-மருத்துவமனை முதல்வர் விளக்கம்
image
இந்த விவகாரம் தொடர்பாக அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலிடம் விளக்கம் கேட்ட போது, குழந்தைக்கு பிறந்த நான்கு நாட்களில் மூக்கில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியதாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஆனால் மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவிக்காமல் குழந்தைக்கு பிறப்புறுப்பில் சுன்னத் செய்து விட்டதாகவும், நீர்ப்பாதையில் அடைப்பு இருந்ததாகவும், குழந்தைக்கு தற்போது எந்த பிரச்சனையும் இல்லை எனவும், சுன்னத் செய்வது நல்ல விஷயம், ஆனால் பெற்றோரிடம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதை சொல்லாததது தவறு தான் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.