சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் நேற்று வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
பாமாயில், பருப்பு கொள்முதலில் 5 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட்களுக்கு சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்துக்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலா இம்பெக்ஸ், ஹிராஜ் டிரேடர்ஸ், பெஸ்ட் டால் மில் மற்றும் இன்டகிரேடட் சர்வீஸ் ப்ரொவைடர் ஆகிய 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்து, மாவட்டம் வாரியாக விநியோகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ததில் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் சோதனை மேற் கொண்டனர்.
சென்னை மண்ணடி தம்பு செட்டித் தெருவில் உள்ள அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், காமாட்சி அண்ட் கோ, ஏழுகிணறு பகுதியில் உள்ள ஹிராஜ் டிரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இன்டகிரேடட் சர்வீஸ் மற்றும் அண்ணா நகரில் உள்ள இன்டகிரேடட் சர்வீஸ் ப்ரொவைடர் அலுவலகம் தொடர்புடையவரின் வீடு மற்றும் சேலம், மதுரை, கும்மிடிப்பூண்டி என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கரோனா காலக்கட்டத்தின்போது வெளிநாடுகளில் இருந்து பாமாயில், பருப்பு கொள்முதல் செய்ததில் இந்த நிறுவனங்கள் முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதால், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வருமான வரிச் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சோதனையில் ரொக்கப் பணம், நகை, மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட்கள் சோதனை நடைபெறும் என்றும், பின்னர் கணக்கில் வராத வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ரூ.1,297 கோடி செலவில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. அருணாச்சலா இம்பெக்ஸ் மற்றும் இன்டகிரேடட் சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள்தான் பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான உணவுப் பொருட்களை விநியோகம் செய்தன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமற்று இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
அதேபோல, ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சுமத்தின. இதையடுத்து, பொங்கல் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு, தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.3.75 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.