சென்னை: “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” செயல்படுத்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள புகார்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”ஊரக பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘நம்ம ஊரு சூப்பரு ” என்ற “சிறப்பு மக்கள் இயக்கம்” அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழி கழிவுமேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திட முதல்வர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.
”நம்ம ஊரு சூப்பர் இயக்கம்”, மத்திய அரசின் “தூய்மையே சேவை” இயக்கத்தோடு இணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 – வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது. நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் சேகரமாகியிருந்த 47,399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள், 1,569 கீ.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் செலவினங்கள் மத்திய நிதிக்குழு மானியம் அனுமதித்துள்ள வரையறுக்கப்பட்ட நிதியில் இரண்டு சதவீதம் நிர்வாக செலவின தொகுப்பிலிருந்தோ அல்லது பொது நிதியிலிருந்தோ மேற்கொள்ள ஆணையர், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் அறிவுறுத்தப்பட்டது.
விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6×4, 12×8, 10×8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன.
ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும்.
“நம்ம ஊரு சூப்பரு” இயக்கத்தின் காரணமாக ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் மூலம் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தின் கிராமப்புற சுகாதாரம் சிறப்பாக உள்ளது என Swachh Survekshan Grameen-2022 கணக்கெடுப்பின்படி அங்கீகரிக்கப்பட்டு தேசிய அளவில் தமிழகம் “மூன்றாம் இடம்” பெற்று குடியரசுத் தலைவரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.