மதுரை அருகே கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான நடுகல் கண்டறியப்பட்டது.

மோதகம் கரையாம்பட்டி பூசாரி முத்துசாமி, தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக அளித்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, ஆய்வாளர்கள் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் கிபி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கற்சிற்பம் என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறும்போது, ”சங்க கால முதல் போரில் வீர மரணமடைந்த வீரன் நினைவாக நடுகல் நடப்படும் முறை தொடர்கிறது. பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறந்து விளங்கியது. நான்கு அடி உயரம் 2 அடி அகலமுடைய நடுகல்லில் 3 வரி எழுத்துக்கள் உள்ளன. இதில் வாணன், உட்பட்ட என்ற வரியைத் தவிர மற்ற எழுத்துக்கள் தேய்ந்துள்ளதால் பொருளறிய முடியவில்லை.

நடுகல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. ஆணின் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை கூறுகின்றன. வலது கையில் பிடித்துள்ள வாள் தரையை உரசியவாறு உள்ளது. பெண் சிற்பம் ஆணின் வலது பக்கம் அமர்ந்து தன்னுடைய தலைக்கு இணையாக இடது பக்கத்தில் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் எழுத்து வடிவம், உருவ அமைப்பை பொறுத்து கி.பி.16-ம் நூற்றாண்டு சிற்பம் என கருதலாம். இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர் பரம்பரையினராக இருக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.