ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்… நூதன மோசடி! – ராணுவ வீரரை தேடும் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு, ராணுவத்தில் இணைய, ராணுவ ஆட்சேர்ப்பு முகாமுக்கு சென்றிருக்கிறார். அங்கு ராகுல் சிங் என்ற நபர் அறிமுகமாகியிருக்கிறார். இந்த முகாமில் மனோஜ் குமார் தேர்வாகவில்லை. ஆனால், ராகுல் சிங் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், இருவருக்குமான தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ராணுவ வீரர்கள்

அதைத் தொடர்ந்து, மனோஜ் குமாரிடம், “ராணுவத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது, உன்னையும் ராணுவத்தில் சேர்த்து விட முடியும், ஆனால், அதற்கு 8 லட்சம் வரை பணம் தேவைப்படும். எனவே பணத்தை தயார் செய்துக்கொண்டு என்னிடம் வா வேலை வாங்கு தருகிறேன்” என ராகுல் சிங் தெரிவித்திருக்கிறார். அதை நம்பிய மனோஜ் குமார் 8 லட்சம் ரூபாயை ராகுல் சிங்கிடம் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடல் பரிசோதனைக்கு வர வேண்டும் எனக் கூறி மனோஜ் குமாரை வர வைத்த ராகுல் சிங், உயர் அதிகாரி தோற்றத்தில் பிட்டு என்ற நபரை நடிக்க வைத்து மனோஜ் குமாரை நம்ப வைத்திருக்கிறார்.

அந்த சோதனையில், உடற் பயிற்சி சோதனைகள் செய்வது போல இருவரும் நடித்திருக்கிறார்கள். மேலும், அதில் மனோஜ் குமார் தேர்வாகிவிட்டதாகவும், அவருக்கு பணி நியமன ஆணை, அடையாள அட்டை, ராணுவ உடை, துப்பாக்கி என சகலமும் வழங்கி, பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் பகுதிக்கு அருகில் ராணுவ பாதுகாவலராக நிற்க வைத்திருக்கிறார்கள். மேலும், அவருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.12,500 சம்பளமும் வழங்கியிருக்கிறார்கள்.

ராணுவம்

இந்த நிலையில், கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக ராகுல் சிங் ராணுவத்தில் இருந்து விலகினார். இதற்கிடையில், மனோஜ் குமாருக்கு முகாமில் இருக்கும் உண்மையான ராணுவ வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே மனோஜ் குமாரின் அடையாள அட்டை முதல் அனைத்து ஆவணங்களும் போலி எனத் தெரியவந்திருக்கிறது. உடனே, ராணுவ வீரர்கள் மனோஜ் குமார் தொடர்பான தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரிக்கப்பட்டதில், அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.

அதன் பிறகு மனோஜ் குமார் மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்கே அனுப்பட்டார். ராகுல் சிங், பிட்டு உள்ளிட்டவர்கள் மீது வழக்கு மோசடி வழக்கு பதியப்பட்டு, பிட்டு, அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜா சிங் ஆகியோரை கைது செய்திருக்கிறது. முக்கிய குற்றவாளியான ராகுல் சிங் தலைமறைவாகியிருக்கிறார். காவல்துறை அவரையும் தேடி வருகிறது.

காவல்துறை

நாட்டை பாதுகாக்கும் உயரிய பொருப்பான ராணுவத்தில் சேருவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமா…? ராணுவத்தில் சேர்வதற்காக பணம் கொடுத்து ஏமாறும் பல இளைஞர்கள் இந்த நாட்டின் தொடர் கதையாகிவருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.