உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையொன்றில், மருத்துவர்கள் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க தயக்கம் காட்டி, நெருங்க மறுத்ததால், அவர் 6 மணிநேரம் வலியில் துடித்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக கர்ப்பிணியை அவரின் தந்தை, தனியார் மருத்துவமனையொன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு பிரசவத்துக்கு 20,000 ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்த அளவுக்கு வசதியில்லாத பெண்ணின் தந்தை, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) மாவட்ட கள அதிகாரி சரிதா யாதவுடன் கலந்தாலோசித்துவிட்டு, தன் மகளை ஃபிரோசாபாத்(Firozabad) மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு பலமணிநேரமாக அவருக்கு சிகிச்சையளிக்கப்படவேயில்லை. இது குறித்துப் பேசிய பெண்ணின் தந்தை, “நாங்கள் மருத்துவமனையை வந்தடைந்த பிறகும், 6 மணி நேரத்துக்கும் மேலாக பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை கவனிக்க எந்த மருத்துவரும் முன்வரவில்லை. என் மகளுக்கு சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனுமில்லை. பிறகு இந்த விஷயம் மருத்துவமனையின் மூத்த அதிகாரிகளுக்குச் சென்ற பிறகுதான் ஒரு செவிலியர் என் மகளை லேபர் ரூமுக்கு அழைத்துச் சென்றார்” என்று கூறினார்.

அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து குழந்தையைப் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதியும் மறுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் குழந்தை, பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால், அடுத்தநாள் காலையில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
மேலும் இது குறித்து NACO கள அதிகாரி சரிதா யாதவ், இந்தச் சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் இது தொடர்பாகப் பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்ததையடுத்து, தற்போது விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக ஃபிரோசாபாத் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கீதா அனேஜா தெரிவித்திருக்கிறார்.