திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி வரும் 29-ம் தேதி ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக 24 மணி நேரத்தில் புதிய தேர்தல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம் அனைத்து அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழின் பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், தமிழ் மொழிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.
அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசிவரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற கோரி வரும் நவம்பர் 29-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறும் ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது மத்திய அரசு எழுத்துபூர்வமாக உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நவம்பர் 26-ல் (நாளை) அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி விவசாய சங்கங்கள் நடத்தும் முற்றுகைப் போராட்டம் மற்றும் பேரணிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
கால அவகாசம் கொடுக்காமல் ஆதார் இணைக்காவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தற்போதைய அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
வரும் டிசம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை நெல்லையில் நடைபெறும் ஏஐடியுசி மாநாட்டில் தொழிங்சங்களின் பிரச்சினைகள் குறித்து பேசி போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.
பெண்களை இழிவுப்படுத்தும் கட்சியாக உள்ள பாஜகவில்தான் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் சேருகின்றனர்.
சரிவை சந்தித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 1964-க்கு முந்தைய கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளனர். பலவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது” என்றார்.