கலவரக்காரர்களுக்கு 2002 பாடம்..குஜராத்தில் நிலையான அமைதி..அமைச்சர் அமித் ஷா பேச்சு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களது பங்குக்கு குஜராத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்தவகையில் குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் மஹுதா நகரத்தில், பாஜக வேட்பாளரை ஆதரத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கடந்த 1995ம் ஆண்டு வரை, வகுப்புவாத கலவரங்கள் உச்சத்தில் இருந்தன. இரு சமூக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்குவதே காங்கிரஸ் கட்சியின் பணியாக இருந்தது. இத்தகைய கலவரங்களின் மூலம் காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாக்கு வங்கியை பலப்படுத்துகின்றனர், பெரும்பான்மையாக உள்ள சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு அநீதியை இழைத்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரமானது, காங்கிரஸ் கட்சியினரால் நீண்டகாலமாக ஆதரவு பெற்றவர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதற்கு பிற்கு கலவரக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுவிட்டது. அவர்கள் வன்முறையை கைவிட்டனர். 2002க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் வன்முறை இல்லை. பாஜக அரசு குஜராத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வகுப்புவாத கலவரங்களில் ஈடுபடுவர்கள் மீது பாஜக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததின் விளைவே, குஜராத் அமைதியான மாநிலமாக தற்போது விளங்குகிறது’’ என அமித்ஷா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.