தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர் நிரம்பியுள்ளது.
இதனையடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அருவிகளில் குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளம் உள்ள உடும்பு ஒன்று கீழே விழுந்துள்ளது. பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பு தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது.
இதனைப் பார்த்த பெண்கள் பயந்து அலறி அடித்து ஓடினர். அதன் பிறகு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.