கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ‘மெட்ராஸ் ஐ’ வந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

நாகர்கோவில்: பருவநிலை மாற்றம் காரணமாக, குமரி மாவட்டத்திலும் தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கண் மருத்துவமனை பிரிவில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று 24ம் தேதி வரை 106 பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். பத்மனாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரை 14 பேர் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக வந்துள்ளனர். பள்ளிகளில் ஒரு மாணவருக்கு பரவும் இந் நோய் பல மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழை காலத்தில் வழக்கமாக நோய்கிருமிகள் அதிக அளவில் பெருகுகிறது. ‘மெட்ராஸ் ஐ’ கண்வலி அடினோ வைரஸ், மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகிறது. இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது. 50% மக்களுக்கு தானாகவே சரியாகிவிடும். அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே மருத்துவரைப் பார்க்க வேண்டியிருக்கும். இந்நோய் தாக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 நாள்முதல் 15 நாட்கள் வரை நீடிக்க கூடும். அறிகுறிகளாக சிவப்பு நிற கண்கள், கண்களில் நீர் வடிதல், கண்களில் லேசான வீக்கம், எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு காணப்படும்.

இந்நோய், பாதிக்கப்பட்ட நபரை பார்ப்பதால் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும். பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன் கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது இவர் கையிலுள்ள வைரஸ் அந்த பொருட்களில் தொற்றிக் கொள்கிறது. இவ்வாறு தொற்றுக்குள்ளான ஒரு பொருளை இன்னொருவர் தொடும் போது அந்த வைரஸ் கிருமிகள் அவர் கைகளில் தொற்றிக் கொள்கிறது. அவரின் கைகள், கண்களில் படும் போது அவருக்கு தொற்று ஏற்படுகிறது.

கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை அடிக்கடி ‘சானிடைசர்’ பயன்படுத்தி கழுவ வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். பிறரது பொருள்களை தொடாமல் இருக்க வேண்டும். கண்களை கைகளால் தொடவோ, கசக்கவோ கூடாது. பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.