சென்னை-சபரிமலை சிறப்பு ரயில்; இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடங்கள்!

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனையொட்டி சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதி வருகிறது.

தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் கோயிலில் உள்ள சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றாக கருதப்படும் களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் செய்து வருகின்றனர்.

சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது, பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி உள்ளிட்ட திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

இந்த அவசர சிகிச்சை மையத்தில் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

சபரிமலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் 75 ஆயிரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐய்யப்பனை தரிசனம் முடித்து திரும்பினர்.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் ஐயப்பனை தரிசிக்க வருகின்ற பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலைக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று வருகின்றனர். இது போன்ற ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவம்பர் 28, டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

அதேப்போல தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் (06067), நவம்பர் 29, டிசம்பர் 6, 13, 20, 27, மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நவம்பர் 25ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.