விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அதிமுகவை கட்டுப்படுத்தவும் ஆலோசனை கூறவும் பொதுக்குழு உள்ளது. அதிமுகவின் பொதுக்குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறாரோ அதைத்தான் அதிமுக தொடர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
டிடிவி தினகரன் வைத்திருப்பது கட்சி அல்ல கூட்டம். எடப்பாடியை நம்பி போகிறவர்கள் அனாதையாக போவார்கள் என கூறியுள்ளார், ஆனால் டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழுக்க முழுக்க காரணமே டிடிவி தினகரன்தான்
திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்து சில வழக்குகளை நீக்கியதால்தான் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே ஜெயலலிதா தோட்டத்திலிருந்து தினகரனை வெளியேற்றினார்.
திமுக ஆட்சியில் அமைச்சர்களுக்குள்ளேயே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபான விற்பனை, கூட்டுறவுதுறை ஆகியவை குறித்து நிதியமைச்சர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார். கடந்த 10 நாள்களாக தமிழகத்தில் அரசு கேபிள் சேவை முடங்கியுள்ளது. அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பத்திரிகை ஜனவரி 17ஆம் தேதி அதிமுக ஒன்றாக இணையும் என எழுதியுள்ளனர், யாருடைய ஆலோசனையும் அதிமுகவுக்கு தேவையில்லை” என்றார்.