முடிவுகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு மந்தமாக உள்ளது- திமுக எம்.பி சண்முகம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதம் ஆகிவிட்டது. அந்த ஒப்பந்தத்தில் முடிவான பல விஷயங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கூட்டுக்குழு சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பொதுச் செயலாளரான சண்முகம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் “போக்குவரத்து துறையில் கொரோனா காலத்தில் பணியாற்றியவருக்கு ரூ.300 ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்த நாட்களை பணி நாட்களாக ஒப்புதல் அளித்த நிலையில் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்கு நாள் வேலை நிறுத்தத்திற்கு ஒரு நாளும், கடந்த 2017 இல் நடந்த 4 நாள் வேலை நிறுத்தத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பதவி உயர்வு தொடர்பாக அளித்த ஒப்புதல்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஓய்வூதியதாரரின் அகவிலைப்படை உயர்வு, பணியில் இறந்தோர், விருப்ப ஓய்வுப்பெற்றோர், உடல் நலம் பாதிப்பால் விடுவிக்கப்பட்டோருக்கு பண பலன் வழங்கப்படவில்லை. 

அதே போன்று நிலையான குடும்ப நலநிதி பிரச்சனைகளின் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசின் போக்குவரத்து துறை இந்த முடிவுகளை செயல்படுத்துவதில் மந்தமாக உள்ளது. எனவே போக்குவரத்து துறை அமைச்சர் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல் நிலை வரும் நிலையில் தற்போது போக்குவரத்து துறையின் மீது ஆளும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.