தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவோடு சேர்த்து நான்கு மாநிலங்களின் நதிநீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைத்ததுதான் காவேரி நீர் மேலாண்மை ஆணையம். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையில், மத்திய அரசால் 2018ல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகிறது. அவ்வப்போது 4 மாநில பிரதிநிதிகளும் தண்ணீர் குறித்து கலந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேக்கேதாட்டூ அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகம் வலியுறுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கடுத்து மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கர்நாடக அரசிடம் பதில் மனு கேட்டு இருந்தார், அதற்கு பதில் மனுவும் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமணன், உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘மேக்கேதாட்டூ அணையின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து முடியும் வரை காவிரி நீர் ஆணையம் அது குறித்து ஆலோசனைகள் கூற முடியாது. மேக்கேதாட்டூ அணை குறித்து முடிவுகள் எடுக்க காவிரி நதி நீர் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து விவாதிக்கப்படும் எந்தக் கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பை கடைப்பிடித்ததா? இந்த மேக்கேதாட்டூ அணை விவகாரம் இன்று, நேற்று தொடங்கியது அல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
கர்நாடகாவை விட தமிழகத்தில்தான் காவிரி வழித்தடம் நீளமாக செல்கிறது. இந்நிலையில் அங்கு அணை கட்டினால் தமிழகதிற்கு வரும் நீர் தேக்கப்படும். தமிழகத்தின் அச்சத்திற்கு இதுவே காரணம். இன்று வரை நடந்து கொண்டிருக்கும் வழக்கில் மேக்கேதாட்டூ குறித்து காவேரி நீர் ஆணைய கூட்டத்தில் எந்த ஆலோசனையும் மேற்கொள்ள கூடாது’ என அந்த மனுவில் முன் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முனைவர் அ.வீரப்பனிடம் கேட்டபோது, “தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு சரியான நடவடிக்கை. ஏனென்றால், காவிரி ஆற்றின் குறுக் கே கர்நாடகம் எப்படியாவது, எந்த வழியிலாவது அணையை கட்டிவிட வேண்டும் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்த அரசும் தமிழகத்துக்குச் சாதகமாக நடந்து கொள்வதில்லை. நமக்கு நியாயம் கிடைக்க இருக்கும் ஒரே இடம் உச்ச நீதிமன்றம்தான். எனவே மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த மனு குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும். மத்திய அரசு ஆணைய கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று பதிலளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் மத்தியிலும் பி.ஜே.பி அரசு, கர்நாடகத்திலும் பி.ஜேி.பி அரசுதான். இருந்தாலும் உச்ச நீதிமன்றம் மனுவில் தாக்கல் விஷயங்களை கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன். காவிரி மேலாண்மை ஆணையம் நதிநீரைக் கண்காணிக்கக்கூடிய ஓர் அமைப்புதான். அணை கட்டும் விவகாரங்களை விவாதிக்கக்கூடிய அதிகாரம் அதற்கு இல்லை” என்றார்.