காந்தி நகர்: இந்திய மாநிலங்களில் 100 சதவீத 5ஜி சேவையை பெற்ற முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது குஜராத். அந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் முழு 5ஜி கவரேஜை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கப் பெறும் என டெலிகாம் நிறுவனங்கள் சொல்லி இருந்தன.
கடந்த அக்டோபரில் ஜியோ நிறுவனம் இந்தியாவின் நான்கு நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை அறிவித்தது. படிப்படியாக அது மேலும் சில நகரங்களுக்கு விரிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 25) குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது ஜியோ. இதன் மூலம் இந்தியாவில் 100% 5ஜி சேவையை பெற்ற முதல் மாநிலமானது குஜராத்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புனே நகரில் 5ஜி சேவையை ஜியோ ரோல் அவுட் செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாத்துவாரா போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
இப்போதைக்கு இது பீட்டா சேவை என்றும், பயனர்களுக்கு இதனை பயன்படுத்துவதற்கான அழைப்பு கிடைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிகிறது. ரூ.229-க்கு மேல் உள்ள அனைத்து பிளான்களுக்கும் 5ஜி சேவையை ஜியோ வழங்கி வருகிறதாம். ஜியோ 5ஜி சேவை பீட்டா ட்ரையலுக்கு அழைப்பு கிடைத்த பயனர்கள் இதனை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.