பீகாரில் ஒரு கிராம சபை, 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஐந்து தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் பலரையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி 5 வயது சிறுமியை அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம சபை முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர். அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார். பின்னர் அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
5 Sit-Ups Is Punishment For Raping Girl,In Bihar Village.
In a video from Bihar, a man is seen doing sit-ups in front of a crowd. Five sit-ups were his “sentence” for allegedly raping a 5yrs old girl.♂️
KCR Sir Nation Needs you.@RaoKavitha #Bihar#Telangana #Shameless pic.twitter.com/nVL6CWg3Lg
— Siddiq Shaik (@siddiqshaik87) November 25, 2022
அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பரவலாக வெளிச்சத்துக்கு வர, இதனை `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்’ எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். இன்னும் சிலர், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் குறிப்பிட்டு இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா எனவும் கூறிவருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய காவல் ஆய்வாளர் கவுரவ் மங்லா, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை மறைக்க முயன்றவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.