புதுடெல்லி: “உலகில் ஜனநாயகத்தின் தாய் இந்தியா” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இ-நீதிமன்றம் திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஏழைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சட்டங்கள் மிகவும் எளிமையாக்கப்பட வேண்டும். அனைத்து குடிமக்களும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். உரிய நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உலகம் தற்போது இந்தியாவை உற்று நோக்குகிறது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நமது நாட்டின் மீதான மதிப்பு காரணமாக உலகம் இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் நாங்கள் இந்திய மக்கள் என இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது வெறும் ஒரு அழைப்பு, நம்பிக்கை, ஒரு பிரமாணம் என குறிப்பிட்டார்.
உலகில் ஜனநாயகத்தின் தாயாக இருக்கும் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உயர்நோக்கம்தான் நமது நாட்டின் அடையாளம். நமது அரசியல் சாசனம் வெளிப்படைத்தன்மை கொண்டது, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை கொண்டது, நவீன கண்ணோட்டம் கொண்டது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதனால்தான் அது இளைஞர்களை மையப்படுத்தியதாக இருக்கிறது என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள இந்த அமிர்த காலத்தில், அடுத்த 25 ஆண்டு கால நாட்டின் வளர்ச்சிக்கு கடமைதான் வேறு எதையும்விட முதன்மையானது என்பதுதான் நமது மந்திரமாக இருக்க வேண்டும். தனி நபர்களுக்கு மட்டுமல்ல, அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.
இன்னும் ஒரு வாரத்தில் ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்க இருக்கிறது. ஒரு குழுவாக இந்தியாவின் கௌரவத்தையும் நற்பெயரையும் உயர்த்த வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவின் அடையாளத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.