இளம்பெண்ணை கொலை செய்து கடற்கரையில் புதைத்து இந்தியா தப்பிய குற்றவாளி; 4 ஆண்டுகளுக்கு பின் கைது – பரபரப்பு பின்னணி

புதுடெல்லி,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ராஜ்விந்தர் சிங் (வயது 38). ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற ராஜ்விந்தர் 2018-ம் ஆண்டு அந்நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, 2018 அக்டோபர் 21-ம் தேதி ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவதம் முற்றிய நிலையில் கோபத்துடன் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கையில் பழம் மற்றும் பழம் வெட்ட கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு ராஜ்விந்தர் சென்றார்.

அந்த கடற்கரைக்கு அதேபகுதியை சேர்ந்த மருந்தக ஊழியரான டாயா கோர்டிங்க்லி (வயது 24) என்ற இளம்பெண்ணும் தனது செல்லப்பிராணி நாயுடன் சென்றுள்ளார்.

இருவரும் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ராஜ்விந்தரை பார்த்து டாயா கோர்டிங்க்லியின் செல்லப்பிராணி நாய் குரைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜ்விந்தர் டாயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பழம் வெட்ட கொண்டு வந்த கத்தியை கொண்டு டாயாவை ராஜ்விந்தர் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த டாயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, டாயாவின் உடலை கடற்கரை அருகே புதைத்த ராஜ்விந்தர் தன்னை பார்த்து குரைத்த நாயை அருகில் உள்ள மரத்தில் கட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

பின்னர், கொலை செய்த 2 நாட்கள் கழித்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி, 3 குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டுவிட்டு 2018 அக்டோபர் 23-ம் தேதி ராஜ்விந்தர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.

கடற்கரைக்கு சென்ற டாயா கோர்டிங்க்லி மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கடற்கரையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த டாயாவின் உடலை மீட்டனர். இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் டாயாவை கொலை செய்துவிட்டு குற்றவாளி ராஜ்விந்தர் சிங் இந்தியாவுக்கு தப்பிச்சென்றதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் உதவியுடன் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஆஸ்திரேலிய போலீசார் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்த ராஜ்விந்தர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், குற்றவாளி ராஜ்விந்தர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் 5.51 கோடி ரூபாய்) சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். குற்றவாளி குறித்து இந்திய உளவுத்துறை, சிபிஐ, போலீசார் என பல்வேறு இந்திய விசாரணை அமைப்புகளும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தன.

ஆஸ்திரேலியாவில் 2018-ம் ஆண்டு குற்றம் நடந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜ்விந்தரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

சிபிஐ, ஆஸ்திரேலிய உளவு அமைப்பு அளித்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் டெல்லியின் கேடி கர்னல் ரோடு பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி ராஜ்விந்தரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜ்விந்தரை விசாரணைக்கு தங்கள் நாட்டிற்கு அழைத்து செல்ல ஆஸ்திரேலிய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்திய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.