கங்கையில் மூழ்கிய படகு; 34 பயணிகள் கதி?

கங்கை நதி இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாயும் ஒரு ஆறு. இந்திய நாட்டின் முக்கிய ஆறுகளில் கங்கை ஒன்று. கங்கை இந்தியாவின் தேசிய நதியாகவும் உள்ளது.

இமய மலையில், உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதி, தேவப்பிரயாக் என்கிற இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து ‘கங்கை’ ஆகிறது.

இதன் பின்னர் உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து ஹூக்லி, பத்மா என்று 2 ஆறாக பிரிந்து, மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ தூரத்துக்கு பாய்ந்து செல்கிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இந்த ஆற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்கள் ஆகும்.

வங்கதேசத்தில், ‘கங்கை’ ஆறு ‘பத்மா ஆறு’ என, அழைக்கப்படுகிறது. கங்கை இந்துக்களின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மத கடவுள் கங்காதேவி என்றும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கங்கை ஆற்றில் படகு விபத்து என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் இன்று ஏற்பட்டு உள்ள படகு விபத்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசி கங்கை ஆற்றில் 34 பேருடன் இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் படகு சென்று கொண்டு இருந்தது. இந்த படகு கங்கை ஆற்றில் கெடாகாட் அருகே வந்தபோது திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி உள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த படகோட்டி தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆற்றில் குதித்து தப்பி சென்றார். படகில் இருந்த பயணிகள் மற்ற அனைவரும் உயிர் பயத்தில் அலறினர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்த உள்ளூர் படகோட்டிகளுடன் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, படகில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இந்த படகு விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உத்தரப் பிரதேச மாநில போலீசார் தெரிவித்தனர்.

படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால், தண்ணீர் உள்ளே புகுந்து இந்த விபத்து நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த படகு விபத்து குறித்து ஏ.சி.பி அவதேஷ் குமார் பாண்டே கூறுகையில், ‘விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஆனாலும் மீட்கப்பட்டுள்ள பயணிகளில் 2 பேருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.