சென்னை காவல்துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் அறிவிப்பு: வெற்றியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சைபர் கிரைம் , சிசிடிவி பகுப்பாய்வு குறித்து ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த ’சைபர் ஹேக்கத்தான்’’ போட்டி குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவும், விபத்து, வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களின்போது நிகழும் சம்பவங்களை அறியவும், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புக்காகவும், சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதனால், குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுத்து குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் 3வது கண் என்றழைக்கப்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணமும், சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் மூலம் உண்மை தன்மை அறியவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி சைபர் க்ரைம் பிரிவினர், சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக Pixelated Footage, Facial Enhancement, Night head light, Perspective warp, Facial Identification, Automatic detection of Number plate, Automatic tracking of significant object,Automatic traffic controller ஆகிய 8 தலைப்புகளில் சைபர் ஹேக்கத்தான் (Cyber Hackathon) என்ற போட்டி நடத்த உள்ளனர்.

இப்போட்டியில் கலந்து கொள்ள பொதுமக்களை அழைப்பதுடன், விருப்பமுள்ளவர்கள் தனி நபராகவோ, குழுவாகவோ இப்போட்டியில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து நவம்வர் 30ம் தேதிக்குள், சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு இணைய முகவரியான [email protected] என்ற இ-மெயில் முகவரியில் தங்களது விவரங்கள், அடையாள சான்றுகளுடன் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இப்போட்டி 2 கட்டமாக நடைபெற திட்டமிடப்பட்டு, டிசம்பர் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக முதற்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, சைபர் கிரைம் நிபுணர்களால் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்வுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள், 12.12.2022 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு அழைக்கப்பட்டு, நேரடியாக தேர்வு நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் அல்லது குழுவினருக்கு முதல் பரிசு ரூ.50,000/- 2ம் பரிசு ரூ.30,000/- மற்றும் 3ம் பரிசு ரூ.20,000/- வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர். பொதுமக்கள் இப்போட்டி குறித்த விவரங்கள் அறிய சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு தொலைபேசி எண் 044-23452348ஐ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.