திருமணம் மீறிய உறவு; கொலைசெய்யப்பட்ட கான்டராக்டர் – கடத்தல் நாடகமாடிய காதல் ஜோடி சிக்கியது எப்படி?

நெல்லை, பேட்டை எம்.ஜி.ஆர் நகர் அருகேவுள்ள வெங்கப்பன்குளத்தின் அருகில் அழுகிய நிலையில் ஒரு உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அழுகிய நிலையில் கிடந்த உடலை நாய்கள் கடித்துக் குதறியதால் கை, கால்கள் சிதைந்திருந்தன. அதனால் அந்த நபரை கொலைசெய்து உடலை குளத்தில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

குளத்தில் கிடந்த உடல்

அந்த உடலுக்குச் சொந்தக்காரர் யார் என்பது பற்றி போலீஸார் விசாரித்தனர். இதனிடையே, அபிஷேகபட்டியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஜேக்கப் ஆனந்தராஜ் என்ற 60 வயது முதியவரைக் காணவில்லை என அவருடைய மகள் ஜான்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனால் கொலையானவர் ஆனந்தராஜாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். இந்த நிலையில், உடலைப் பார்த்த உறவினர்கள், அது ஆனந்தராஜ் உடல்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, கான்ட்ராக்டர் ஆனந்தராஜின் கார் இரு தினங்களாக சுத்தமல்லி பகுதியில் கிடந்தது. அத்துடன், அவருடைய செல்போனிலிருந்து மதுரை திருமங்கலத்திலிருந்து பேசியவர், அவரைக் கடத்தி வைத்திருப்பதாகவும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் மிரட்டியிருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் திருமணம் மீறிய உறவிலிருந்தது தெரியவந்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட பிரின்ஸ் ஜேக்கப், தேவி

கட்டடத் தொழிலாளியான செல்வி என்பவருடன் ஆனந்தராஜுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனந்தராஜ் அடிக்கடி செல்வியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது செல்வியின் மகள் தேவி என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணமான செல்வி, கணவனைப் பிரிந்து குழந்தையுடன் வசித்துவந்திருக்கிறார். இதனிடையே, இந்த விவரம் தேவியின் காதலன் பிரின்ஸ் ஜேக்கப் என்பவருக்குத் தெரியவந்ததால் தேவியுடன் சண்டையிட்டிருக்கிறார். ஆனாலும் ஆனந்தராஜ் அடிக்கடி தேவி வீட்டுக்குச் சென்று தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் ஆனந்தராஜிடமிருந்து விடுபட, காதலனுடன் சேர்ந்து அவரை கொலைசெய்ததாகத் தெரிகிறது.

தேவியும் அவருடைய காதலன் பிரின்ஸ் ஜேக்கப் என்பவரும் சேர்ந்து ஆனந்தராஜை கொலைசெய்துவிட்டு, உடலைக் கட்டிலுக்கு அடியில் போட்டு மறைத்திருக்கின்றனர். அவருடைய காரை சுத்தமல்லில் பகுதியில் நிறுத்திய பிரின்ஸ் ஜேக்கப், இரவு நேரத்தில் தேவியுடன் சேர்ந்து ஆனந்தராஜ் உடலை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்று குளக்கரையில் வீசிவிட்டு வந்திருக்கிறார்.

போலீஸார் விசாரணை

எனவே இவர்களுக்கு தங்களை போலீஸார் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் போலீஸாரை திசைதிருப்புவதற்காக ஆனந்தராஜின் செல்போனை திருமங்கலம் எடுத்துச் சென்ற பிரின்ஸ் ஜேக்கப், பணத்துக்காக ஆனந்தராஜை கடத்தி வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து நாடகமாடியிருக்கிறார். ஆனாலும் திறமையாக துப்பு துலக்கிய போலீஸார் கொலைசெய்த இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.