பெங்களூரு: மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு வில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37), அதில் பயணித்த முகமது ஷரீக் (24) ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் விசாரித்து வருகின்றனர். என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முகமது ஷரீக் மத அடையாளத்தை மறைத்து, போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஷிமோகாவில் குண்டுவெடிப்பு நடத்தி ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு ‘இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் பிற மாநிலங்கள் மட்டுமின்றி சர்வதேச தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இவ்வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த சம்பவத்தின் தீவிரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதால், இவ்வழக்கை என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. என்ஐஏ சட்டம் 2008-ன் பிரிவு 8 (6), (5) ஆகியவற்றில் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இவ்வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவ் வாறு அமைச்சர் கூறினார்.