ராணிப்பேட்டை அருகே இரவுக்காவலர் வீட்டில் நகை, பணம் திருடியதும் வீட்டிற்கு தீ வைத்து தப்பிய கும்பல்-போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை அருகே நேற்று இரவுக்காவலர் வீட்டில் நகை பணம் திருடிவிட்டு, வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை சிப்காட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமம் புதிய தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(73). இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் இரவுக்காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் தனது கணவருடன் திருத்தணியில் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் புளியங்கண்ணு பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் துர்கா, திருத்தணியில் உள்ள தனது மகளுக்கு தீபாவளி பலகாரம் கொடுப்பதற்காக சென்றார். நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் கந்தசாமி இரவுப்பணிக்கு சென்று விட்டார். நேற்று காலை துர்கா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வீட்டில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கொடுத்த தகவலின்பேரில் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் வீட்டிற்குள் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ₹10 ஆயிரம், பேண்ட் பாக்கெட்டில் இருந்த ₹4000 என மொத்தம் ₹14,000 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.மேலும் நகை, பணத்தை திருடிய மர்ம கும்பல் பின்னர் அந்த வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.