புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்து, வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க உத்தரவிடும்படி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்த்தில் நீதிபகள் கே.எம்.ஜோசப் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி, அரிஸ்டாட்டில், ‘ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணை முடிந்து விட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை,’ என தெரிவித்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப், ‘எத்தனை நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வீர்கள்?’ என கேட்டார். அதற்கு, ‘45 நாட்களில் தாக்கல் செய்யப்படும்,’ என தெரிவித்தனர்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எப்.ஐ.ஆரை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், ‘வேண்டும் என்றால், கீழமை நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம். அதேபோல், குற்றப்பத்திரிக்கையை இன்றில் இருந்து 45 நாட்களில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.