அதென்ன NCMC கார்டு? இன்னும் ஒரே மாதம்… சென்னை மெட்ரோ பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

தலைநகர் சென்னையில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சொகுசு பயணமாகவும் விளங்குகிறது. குறிப்பாக அலுவலகம் செல்வோருக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக உள்ளது. இதில் பயணிக்க டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக மெட்ரோ கார்டுகள் வாங்கினால் சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

மெட்ரோ ரயில் கார்டுகள்

இந்த கார்டை அவ்வப்போது ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதற்கான வசதிகள் மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் வாங்கும் போது ஏற்படும் செலவை விட ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது. இத்தகைய நடைமுறை பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத், டெல்லி, மும்பை மெட்ரோ ரயில்களிலும் இருக்கின்றன.

அதென்ன NCMC கார்டுகள்?

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே கார்டை பயன்படுத்த தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இதனை சென்னையில் அமல்படுத்தும் நேரம் தற்போது வந்திருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) வெளியிட்டுள்ள தகவலின் படி, பல்வேறு நகரங்களின் மெட்ரோ ரயில்களில் பயணிக்க ஒரே கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு NCMC என்று பெயர்.

டிசம்பரில் அமல்

தேசிய பொது மொபிலிட்டி கார்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதைக் கொண்டு பல்வேறு நகரங்களில் பயணம் செய்யலாம். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கலாம். வாகனங்களை பார்க் செய்து கொள்ளலாம். இவை அனைத்திற்குமான கட்டணத்தை NCMC கார்டுகள் மூலம் செலுத்தி விடலாம். இந்த கார்டுகள் வரும் டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது.

ஐடி கார்டு அவசியம்

இதை மெட்ரோ பயணிகள் முறையாக பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முதல்கட்டமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ கார்டு வைத்திருக்கும் நபர்கள் அதே கார்டை தொடர்ந்து பயன்படுத்தி பயணிக்கலாம். இதற்காக ஐடி கார்டை பயணிகள் காண்பிக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே கார்டு

ஆனால் இதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதையொட்டி வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் தீர்வு காணப்பட்டு பயன்பாடு மிகவும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ’ஒரே நாடு ஒரே கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே NCMC கார்டுகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இதைக் கொண்டு புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், நகரப் பேருந்துகள், பார்க்கிங், ஷாப்பிங் ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் பலவிதமான கார்டுகள் பயன்படுத்துவது குறையும். ஒரே கார்டு மூலம் ஏராளமான வசதிகளை பெற முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.