அரசு ஊழியர்களை வளைக்கும் கெஜ்ரிவால்… குஜராத் தேர்தலில் திருப்புமுனை ஏற்படுமா?

இன்னும் 3 நாட்கள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்க்கப்படும் குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கிறது. இதையடுத்து 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக குஜராத் திகழ்ந்து வருகிறது.

கெஜ்ரிவால் வியூகம்

இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் புதிய வியூகங்களுடன் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. டெல்லி மாடல், பஞ்சாபின் எழுச்சி, பாஜக அரசின் குறைகள், குஜராத்தில் நிலவும் பிரச்சினைகள், இலவச அறிவிப்புகள் என பல்வேறு விஷயங்களை அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தி கொண்டிருக்கிறார். நேரடியாகவே சென்று தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

அச்சத்தில் குஜராத் மக்கள்

அந்த வகையில் சூரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் கணித்தது நடந்து விட்டது. அதேபோல் குஜராத் மாநிலத்திலும் நடக்கும். ஆளும் பாஜகவை பார்த்து மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். அதை போக்க அனைவரும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உங்கள் அனைவரது முன்னாலும் என்னுடைய கணிப்பை நான் எழுதப் போகிறேன்.

பழைய ஓய்வூதிய திட்டம்

நீங்களும் எழுதி வைத்து கொள்ளுங்கள். குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று கூறி தான் எழுதியை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் முன்பாக காண்பித்தார். மேலும் பேசுகையில், 27 ஆண்டுகால சீர்கெட்ட ஆட்சியில் இருந்து மக்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆம் ஆத்மி நிறைவேற்றி தரும்.

எனவே ஆட்சி அமைக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வலியுறுத்தினார். முன்னதாக புதிய ஓய்வூதிய திட்டத்தை குஜராத் மாநில அரசு அமல்படுத்தியது. இதன்மூலம் Basic சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை மற்றும் அகவிலைப்படி ஆகியவை சேர்க்கப்படும். இதில் அரசு தரப்பில் குறிப்பிட்ட சதவீதம் போடப்படும்.

ஜனவரி 31ல் அரசாணை

இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே ஏப்ரல் 2005க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் பொருந்தாது என அறிவித்தது. இருப்பினும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று மிகப்பெரிய அளவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த விஷயத்தை குறிவைத்து அரவிந்த் கெஜ்ரிவால் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் வரும் ஜனவரி 31ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்படும். இதனை பஞ்சாபில் செயல்படுத்தியுள்ளோம் எனக் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயம் குஜராத் தேர்தலில் எந்த அளவிற்கு எதிரொலிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.