திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே திருவாரூலிருந்து மன்னார்குடி செல்லும் பிரதான சாலையில் பேருந்து நிலையமானது, கடந்த 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது.

மேலும், இந்தக் கட்டடம் மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் இரவு நேரங்களில் முழுக்க முழுக்க சமூக விரோதிகளின் கூடாரமாக இந்தப் பேருந்து நிலையம் மாறி இருப்பதாக கூத்தாநல்லூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கூத்தாநல்லூர் பகுதியில் இரண்டு ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில் தொடக்கத்தில் 14 கடைகளும், நான்கு கழிவறைகளும் கட்டப்பட்டன. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட ஒரு வருடம் மட்டும்தான் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. கூத்தாநல்லூர் பகுதி பேரூராட்சியாக இருந்த காலத்தில் இந்தப் பேருந்து நிலையம் தமிழக அரசாங்கத்தால் 30 லட்சம் ரூபாய் கடனில் கட்டப்பட்டது. அந்தக் கடன் தொகை கட்டப்படாததால், இந்தப் பேருந்து நிலையம் பராமரிக்கப்படாமலே போனது.
தற்போது இந்த கட்டடம் பொலிவிழந்து புதர்மண்டியும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடக்கூடிய அபாய நிலையில் இருக்கிறது.
இந்தப் பேருந்து நிலையம், பாழடைந்திருப்பதால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல், கூத்தாநல்லூர் பகுதி மக்கள், சாலைகளிலேயே இறக்கி விடப்படுகின்றனர். குறுகலான இந்த சாலையில் பேருந்துகள் பயணிகளை ரோட்டிலேயே இறக்கிவிடுவதால், கூத்தாநல்லூர் கடை தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூத்தாநல்லூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய கூத்தாநல்லூர் மக்கள், “20 வருடங்களுக்கு மேல இந்த கூத்தாநல்லூர் பஸ் ஸ்டாண்டு செயல்படாமல் கிடக்கு. 1998-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களால எங்க கூத்தாநல்லூர் பகுதிக்கு இந்தப் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. ஆரம்ப காலத்துல ரொம்ப பரபரப்பாவும், பயனுள்ளதாகவும் இந்த பேருந்து நிலையம் இருந்து வந்துச்சு!

அதன் பிறகு ஏற்பட்ட சில கடன் பிரச்னையால அரசாங்கம் இந்தப் பேருந்து நிலையத்த முறையா பராமரிக்காம, அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க.
இப்போ இந்தப் பேருந்து நிலைய கட்டடம் புதர் மண்டி, ரொம்ப மோசமா இருக்கு. இரவு நேரத்துல மது குடிப்பது, புகை பிடிக்கிறதுனு சமூக விரோத செயல்களுக்குத்தான் இந்தக் கட்டடம் பயன்படுது.
அரசாங்கம் இந்தப் பேருந்து நிலையத்த மக்கள் பயன்படுத்ததான் கொண்டுவந்துச்சி… ஆனா, இப்ப இத முழுக்க முழுக்க சமூக விரோதிகள்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க. எங்க கூத்தாநல்லூர் பகுதியில பேருந்து நிலையம் இருந்தும் பயணிகள் நடு ரோட்டுலாதான் இறக்கிவிடப்படுறாங்க.

இதனால நாங்க ரொம்ப சிரமத்துக்கு உள்ளாகுறோம். இந்த பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டுல இல்லாததுனால, நாங்க மன்னார்குடி போய்தான் வெளியூருக்கு செல்லக்கூடிய நிலைம ஏற்பட்டிருக்கும். நாலு மாசத்துக்கு முன்னாடிகூட திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனும், நகராட்சி அதிகாரிகளும் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து ஆய்வு பண்ணாங்க. இந்தப் பேருந்து நிலையம் கட்ட வாங்கப்பட்ட கடன் தொகையை அரசாங்கம் தள்ளுபடி பண்ணியிருப்பதாவும், உடனடியா இந்த இடத்தில புதிய பேருந்து நிலையம் கட்டப்பட இருப்பதாவும் சொல்லிட்டு போனாங்க.
ஆனா, இதுவரைக்கும் எந்த ஒரு பணிகளும் தொடங்கவே இல்ல. உடனடியா அரசாங்கம் இந்தப் பேருந்து நிலைய கட்டடத்த முழுமையா இடிச்சிட்டு, இதே பகுதியில எங்களுக்கு புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுக்கணும்” என்றனர்.

இது தொடர்பாக கூத்தாநல்லூர் நகாராட்சி ஆணையரைச் சந்தித்துப் பேசினோம். “கூத்தாநல்லூர் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு திருவாரூர் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இதே பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிதிலமடைந்த கட்டடத்தை இடிப்பதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த கட்டடம் இடிக்கப்படும்” என்றார்.