புதுடெல்லி: சட்டம், நீதித் துறையில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகள்: காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றதும் இந்திய அரசியல் சாசன வரைவு உருவாக்கமும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகள். நீண்டகால சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்ததால் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, சுதந்திரம் பெற்ற இந்தியா சுயாட்சி செய்யத் தொடங்கியது.
வரலாற்றை மாற்ற வேண்டும்: நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். எனவே, இன்னமும் ஒட்டிக்கொண்டுள்ள சில காலனித்துவ ஆட்சிக் கால நடைமுறைகளை நீக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்புமக்களுக்கும் நீதி மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும்.
மேலும் சட்டம் மற்றும் நீதித் துறையில் பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீதித் துறையில் பணிபுரியும் பலதரப்பட்ட மக்களின் அனுப வத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுடைய அறிவு நீதித் துறையை மேலும் வலுவடையச் செய்யும். இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.