புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்ற் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனும் விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முதல்வர் ரங்கசாமி கையில் எடுக்கிறார். மூன்று மாத காலம் அவகாசம் தந்து மாநில அந்தஸ்து தராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறுவாரா? அது அவரால் முடியாது. அதற்கான வலிமை அவரிடம் இல்லை. பாஜக அவரை மிரட்டி நிர்வாகத்தை கையில் எடுத்துள்ளது.
19 ஆண்டுகாலம் குப்பை அள்ளுவதற்கு ரூ.900 கோடி மதிப்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வரும் 4ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த சூழலில், இந்த டெண்டர் விடப்பட்டது தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்றும், துறை அமைச்சர், நிதி செயலர், ஆளுநர் ஆகியோர் கையெழுத்திடாமல் எவ்வாறு டெண்டர் விட முடியும் என்றும் துறையின் அமைச்சர் பாஜகவைச் சேர்ந்த சாய் சரவணன் குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அந்த கோப்பை தனக்கு அனுப்பி வைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டிலேயே அதிக ஆண்டுகளுக்கு குப்பை அள்ள இங்குதான் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. ரூ.900 கோடி மதிப்புள்ள டெண்டருக்கான கோப்பை, துறை அமைச்சரின் பார்வைக்கே கொண்டு செல்லாமல் முதல்வர் ரங்கசாமி டெண்டர் விடுகிறார். இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.