எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நாகையில் தனியார் திருமண அரங்கில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தொழிற்சாலைகளில் 80% வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆளுநரும், தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்” எனக் கூறினார். ராகுல்காந்தியின் நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலில் ராகுல் காந்தி நடைபயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி, பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று கூறினார்.