தூத்துக்குடி: மழைக்காக கொடும்பாவி எரித்து… ஒப்பாரி வைத்த கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம்,  பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கொடும்பாவியை அடித்தல்

இந்தாண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.  ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் கொடும்பாவியை தெருத்தெருவாக இழுத்துச் சென்று செருப்பு, துடைப்பத்தால் அடித்தும், ஒப்பாரிப் பாடல் பாடியும் எரித்தனர்.

இந்த சடங்கு செய்தால் மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இப்படி செய்துள்ளனர். செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமியிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இறவைப் பாசன விவசாயத்தைவிட மானாவாரி விவசாயமே அதிக பரப்பளவில் நடக்கிறது. சிறுதானியங்கள், பருத்தி, மிளகாய்தான் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை மாதமே கோடை உழவு ஓட்டி மழைக்காகக் காத்திருந்தோம்.  

ஒப்பாரி

ஆவணி மாதத்தில் ஒரு மழையும், புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணியில் பெய்த மழையை நம்பி சில பகுதிகளில் விதைத்தோம். முளைத்தும் முளைக்காமல் இருந்தது. இதுபோல பருவமழை பெய்யத் தாமதமானால் கிராமங்களில் கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்தல், மழைக்கஞ்சி வழிபாடு, தவளை கல்யாணம், கழுதை கல்யாணம் போன்ற மழைச்சடங்குகளை நடத்துவார்கள்.

எங்க கிராமத்தில் கொடும்பாவி எரிப்பதுதான் வழக்கம். போன வாரம் ஊர் கூட்டம் போட்டு மழைக்காக கொடும்பாவி எரிப்பது என முடிவெடுத்தோம். ஊருக்கு நடுவில் கொடும்பாவி உருவத்தை தயார் செய்தோம். கரகாட்ட கலைஞர்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக்கொண்டே நெஞ்சில் அடித்து அழுவார்கள். அப்படியே கொடும்பாவி உருவத்தை கயிறால் கட்டி ஊரிலுள்ள எல்லா தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றோம்.

கிராம மக்கள்

வழி நெடுகிலும் ஒவ்வொரு வீட்டு முன்பு நிற்பவர்கள் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தார்கள். ஊருக்கு வெளியே கொடும்பாவி உருவத்தை எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினோம். இதனால், ஒன்றிரண்டு நாளில் மழை வரும் என்பது எங்களின் நம்பிக்கை” என்றார்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.