புதுடெல்லி: தங்கள் தோல்வியை மறைக்க பாஜக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் வாழ்க என்ற முழுக்கம் எழுப்பட்டதாக பாஜக குற்றம் சுமத்தியது. இந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் பதிலளித்துள்ளார். “வேலையின்மை, வறுமை, வெறுப்பு என இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சனைகள் அனைத்து தரப்பாலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செய்யும் தியாகத்தின் அளவை முதல் நாளிலிருந்தே மக்கள் உணர்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ராகுல் காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஆனால் தற்போது ராகுல் காந்தியின் உண்மையான முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். அவர் படித்தவர், இரக்கமுள்ளவர் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்கு எதிராக சிந்தித்து வரும் பாஜகவினர், ஏதாவது ஒரு தவறை கண்டுபிடிக்க முடியுமா என முதல் நாளில் இருந்தே முயன்று வருகின்றனர். ஆனால் மக்கள் அவர்களை நம்பப் போவதில்லை. பாஜகவின் விமர்சனங்களுக்கு நாம் மதிப்பு கொடுக்கப் போவதில்லை. இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் இளைஞர்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர். பாஜக அரசு போதிய வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. மாறாக மக்கள் வேலை இழக்கின்றனர். மத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. தங்கள் தோல்வியை மறைக்க மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். உண்மையைக் கூற முயல்பவர்கள் இந்த அரசாங்கத்தினால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தேர்தல் ஆணையம், சிபிஐ அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. நீதித்துறையில் உள்ளவர்கள்கூட சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு அவர்கள் மீதும் அழுத்தம் உள்ளது. நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த யாத்திரை ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக மட்டும் அல்ல..” என்று வேணுகோபால் தெரிவித்தார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “பாரத் ஜோடோ யாத்திரை தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல; ஒரு சித்தாந்தத்துடன் மக்களை இணைக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்கிறோம். யாத்ரா என்பது பிரிவினை சக்திகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதாகும்” என்று பேசினார்.