வேடசந்தூர் அருகே ஆண், பெண் உடலமைப்புடன் 6 காலுடன் பிறந்த அதிசய கன்று: ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஆண், பெண் உடலமைப்பில், 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றை ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்அருகே நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் கேரளா பெருமாள். இவர் தனது தோட்டத்தில் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இதில் ஒரு பசு மாடு நேற்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இடுப்பு பகுதிக்கு மேலே பசு மாடு போன்றும், இடுப்பு பகுதிக்கு கீழே 6 கால்களுடன் ஆண் கன்று உடல் தனியாகவும், பெண் கன்று உடல் தனியாகவும் இணைந்து இருப்பதை கண்டு, கேரளா பெருமாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கன்று பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்தது.

இதுபற்றி அறிந்ததும் அங்கு ஏராளமான ஊர் மக்கள் கூடி அந்த அதிசய கன்றை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதற்கிடையே தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் அக்கன்றை பரிசோதித்து சென்றனர். ஆண், பெண் உடலைமைப்பில் 6 கால்களுடன் கன்று பிறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.