ஏதோ ஒரு பயத்தின் காரணமாக நாம் தோற்றுப்போய் பாதியிலேயே நிறுத்திய விஷயங்களை, என்றாவது ஜெயித்து விட வேண்டும் என்ற அவா அனைவருக்கும் இருக்கும். அவ்வாறு, தான் தோற்றுப்போன ஒரு விஷயத்தில், ஜெயித்துக் காட்ட வேண்டும் என முதியவர் ஒருவர் போராடி வருகிறார்.

இங்கிலாந்தில் வசிக்கும் எர்னி புஃப்பெட் (Ernie Puffett) என்பவருக்கு 84 வயதாகிறது. இவர் கருணை இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் புதிய பழக்கத்தை கடைப்பிடிக்கவும், பிடித்த இடங்களுக்குச் செல்லவும், அதோடு அவர்களின் கடந்தகால வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைச் செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தச் சூழலில்தான், 66 வருடங்களுக்கு முன்பு இயற்பியல் பாடத்தில் ஏற்பட்ட தன்னுடைய தோல்வியை மாற்றியமைக்க வேண்டும் என எர்னிக்கு தோன்றியுள்ளது. West Sussex -ல் உள்ள Chichester கல்லூரியில் அவர் படித்தபோது, தொடர்ச்சியாக ஐந்து முறை இயற்பியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இப்போது தன்னுடைய முதுமைக் காலத்தில், இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என மீண்டும் தன்னுடைய கல்லூரிக்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று படித்து வருகிறார்.
இது குறித்து கல்லூரியின் முதல்வர் ஹெலென் லோஃப்டஸ் கூறுகையில், “எர்னி இயற்பியல் பாடம் படிக்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், அதற்கு நாங்கள் சரி என்று சொல்லத் தயங்கவில்லை.

நம் அனைவருக்கும் லட்சியம், நோக்கம் உள்ளது. எர்னியின் இலக்கை அடைய அவருக்கு ஆதரவு அளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் பயணத்தில் அவரின் கனவைத் தொடுவதற்கு ஆதரவாகப் பாட வகுப்பிற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்துள்ளோம்.
படிப்பதற்கு வயது வரம்பு என்று இல்லை என்று நாங்கள் அடிக்கடி கூறுவோம். அதை இப்போது செயலில் பார்ப்பது அதிசயமாக உள்ளது.
வகுப்பில் அனைத்து வயது மாணவர்களையும் கொண்டிருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. வெவ்வேறு வயதுள்ளவர்கள், வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கற்றுக் கொள்வதால் பல நன்மைகள் உண்டு. அவர்கள் பலவிதமான அனுபவத்தையும், அறிவையும் வகுப்பறைக்குக் கொண்டு வருகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
84 வயதில், தோற்றதை ஜெயிக்க வேண்டும் என்று நினைத்து செயலில் இறங்கியிருக்கும் எர்னி நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரி!