இஸ்லாமிய வெறுப்பு உங்களுக்கு விளையாட்டா? – வகுப்பறையில் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவர்

இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எப்போதும், சிறுபான்மையினர் மீது ஒருவித அச்சுறுத்தல் மனப்பான்மை நீடித்துக்கொண்ட இருக்கிறது. அரசியல் காரணங்கள், வியாபார காரணங்கள் என அவர்கள் மீது கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கங்களுக்கு பல அடுக்குகளாக செயலாற்றுகின்றன.  

சமீப காலங்களில், இஸ்லாமியர்கள், தலித்துகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் என்பது அளவிட முடியாத அளவில் உள்ளன. இருப்பினும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்த தகவல்களின்படி, 2018ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரை மட்டும், தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றங்களின் கீழ் சுமார் 1 லட்சத்து 39 ஆயிரத்து 45 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 50, 291 வழக்குகள் 2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளது. 

இஸ்லாமோபோபியா 

தலித்துகள் மட்டுமில்லாமல், இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராகவும் பல்வேறு வன்முறைகள் நடந்துவருகின்றன. தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்தினரை ஒரு பயங்கரவாத குழுக்களாக சித்திரிக்கும் மனநிலையை பல்வேறு அமைப்புகள் வேண்டுமென்றே உருவாக்கிவருகின்றன. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, மங்களூரு குக்கர் வெடிப்பு ஆகியவை இந்த விஷ பிரச்சாரங்களுக்கு சமீபத்திய உதாரணங்கள் ஆகும்.  

நேரடி வன்முறை மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான தாக்குதல் விவரிக்க முடியாத அளவிற்கு வேரூன்றியிருக்கிறது. ‘இஸ்லாமோபோபியா’ என்பது இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரும் பிரச்னைக்குரியதாக உள்ளது. 

இந்நிலையில், சமூகத்தில் கறையேறி உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு வீடியோ ஒன்று தற்போது வைராலாகி வருகிறது. அந்த வீடியோ ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது. 

‘BEING MUSLIM IN THIS COUNTRY IS NOT FUNNY’

அந்த பேராசிரியர், வகுப்பில் இருந்த அந்த குறிப்பிட்ட மாணவனிடம் கேள்விகேட்க அந்த மாணவனின் பெயரை கேட்டுள்ளார். இஸ்லாமிய மாணவரான அவர் தனது பெயரை கூறியுள்ளார். உடனே, “ஓ… நீ கசாபா ? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என்று கூறியுள்ளார். அதாவது ‘பயங்கரவாதி’ என்ற பொருளில் அந்த மாணவனை அழைத்துள்ளார். 

இதனால், வெகுண்டெழுந்த அந்த மாணவன்,”நீங்கள் எப்படி என்னை அப்படி சொல்லி அழைக்காலம்” என கேட்டுள்ளார். அதற்கு பேராசிரியர்,”நீ என் மகன் போன்றவன். விளையாட்டுக்காக அப்படி சொன்னேன்” என்றார். 

அதற்கு அந்த மாணவன்,” 26/11 (மும்பை தாக்குதல் சம்பவம்) விளையாட்டான காரியம் இல்லை. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும், இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பதும் விளையாட்டு இல்லை. உங்கள் மகனை அப்படி அழைப்பீர்களா. மாட்டீர்கள் தானே, அப்போது ஏன் என்னை மட்டும் அழைக்கிறீர்கள்?. அதுவும் வகுப்பறையில் அனைவரின் முன்னிலையில் எப்படி அவ்வாறு அழைப்பீர்கள். நீங்கள் போராசிரியர், பாடம் எடுக்கும் இடத்தில் இருக்குறீர்கள்” என அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தார். 

பேராசரியர் இடைநீக்கம் 

அந்த பேராசிரியர் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டாலும், அதற்கு அந்த மாணவர்,”மன்னிப்பு கேட்பது என்பது இந்த சீர்க்கேட்டை எந்த வகையில் இதை சரிசெய்யாது” என்று உரக்க கூறினார். இத்துடன் 45 விநாடி வீடியோ நிறைவடைகிறது. அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள், வகுப்புக்கு பின்னர் அந்த மாணவனுக்கு ஆதராவாக துணைநின்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. அந்த மாணவனின் பெயரையும், படிக்கும் கல்வி நிறுவனத்தையும் குறிப்பிட வேண்டாம் என அந்த மாணவர் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதன் தகவல்கள் இங்கு பகிரப்படவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அந்த பேராசிரியரை இடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இச்சம்பவம், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.