ஈரோடு: கனவில் வந்த பாம்புக்கு, பரிகார பூஜை செய்ய முயன்ற ஈரோடு விவசாயியின் நாக்கில் பாம்பு தீண்டியது. இதையடுத்து, தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குணமடைந்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த 54 வயதுமதிக்கத்தக்க விவசாயி ஒருவரின்கனவில், அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சாமியார் ஒருவரை அணுகுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அந்த சாமியாரை விவசாயி அணுகியபோது, பாம்புக்கு பரிகாரம் செய்தால், பாவங்கள் நீங்கி, கனவு வருவது நின்று விடும் எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய விவசாயி, பரிகார பூஜைக்கு ஒப்புக் கொண்டுள்ளார். பூஜையின்போது அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை, விவசாயி முகத்தின் முன் காட்டி, நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுமாறு பூசாரி கூறியுள்ளார். அதன்படி, விவசாயி நாக்கை நீட்டியபோது, பாம்பு அவரது நாக்கைத் தீண்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, விஷம் பரவுவதைத் தடுக்கும் வகையில் விவசாயியின் நாக்கை கத்தியால் கீறியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவசாயி சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர் செந்தில் குமரன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தனர். இதில் விவசாயி உயிர் பிழைத்ததோடு, அவரது நாக்கு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர் செந்தில் குமரன் கூறியதாவது: நோயாளியின் நாக்கில் பாம்பு தீண்டிய நிலையில், விஷம் பரவுவதைத் தடுக்க, நாக்கைக் கீறியுள்ளனர். இதில் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் மயங்கினார். 20 நிமிடஇடைவெளியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, அவரது நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பின் அவர் வீடு திரும்பிஉள்ளார். அவருக்கு இயல்பான பேச்சு வரத் தொடங்கியுள்ளது. பாம்பு தீண்டினால், மூட நம்பிக்கைகளை நம்பாமலும், வீட்டு வைத்தியம் செய்யாமலும், மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் குணப்படுத்த முடியும் என்றார். இச்சம்பவம் குறித்து வனத் துறை,போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.