சீருடை பணியாளர் தேர்வு: “வெளிப்படையாக நடக்கிறது; இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்கள்” – டி.ஐ.ஜி ஆனிவிஜயா

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 3,552 இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்கள் 5,466 பேர், பெண்கள் 2,168 பேர் என மொத்தம் 7,634 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் காவலர் பயிற்சி கல்லூரி காவல் துணைத் தலைவர் ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு எழுதுபவர்களின் வினாத்தாள் விடைத்தாள்களையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுக்கோட்டை மாட்டத்தில் 5  மையங்ககளில் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது, இதில் ஒரு மையத்தில் பெண்களுக்காக பிரத்யோகமாக தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் 2,168 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு வெளிப்படைத்தன்மையோடு உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.

சீருடை பணியாளர் தேர்வாணையத்தைப் பொறுத்தவரையில் எல்லாமே ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. வெளிப்படை தன்மையோடும் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதால், இதில் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். இதில் முறைகேடு நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏதுமில்லை.

ஏற்கனவே,10,000 பேர் பயிற்சி அளித்து அனுப்பியுள்ளோம். தற்போது தேர்வாகும் 3 ஆயிரம் பேரையும் தேர்வு செய்து உரிய பயிற்சி அளித்து அனுப்பி வைப்போம். காவலர்களுக்கான மன அழுத்தத்தை போக்க தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அனைத்து விதமான மனநலம் சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு மனநிறைவோடு காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஏதேனும் ஒரு இடத்தில் இதில் பிரச்னை இருந்தாலும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.