
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜிய நாட்டு ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீ வைத்து கொழுத்தினர்.
மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.