மதுரை: மதுரை மத்திய சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தங்களது உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் பேசும் நவீன நேர்காணல் அறையை டிஐஜி பழனி திறந்து வைத்தார்
தமிழக அரசு, சிறைகள் சீர்திருத்தத் துறை அமைச்சர் உத்தரவின் பேரிலும், சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்படியும், தென்மாவட்ட சிறைகளில் முதன்முறையாக மதுரை மத்திய சிறையில் ஆண், பெண் கைதிகள் நேர்காணல் அறை சுமார் ரூ.70,000 செலவில் நவீனமாக்கப்பட்டது. அந்த அறையில் இன்டர்காம் வசதி, கண்ணாடி தடுப்புகளுடன் கேமராக்கள் பொருத்தி முற்றிலும் நவீன மாயக்கப்பட்டுள்ளன.
கைதிகள் தங்களது உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் பேசுவது தொந்தரவு இன்றி எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நேர்காணல் அறையின் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த அறையை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார். விழாவில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”இச்சிறையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், கைதிகளுடன் அவர்களது உறவினர்கள், வழக்கறிஞர்கள் அடிக்கடி வந்து பேசுவதற்கான நேர்காணல் அறை உள்ளது. கைதிகளுடன் பேசும்போது, சத்தம் அதிகமாக இருப்பதால் இரு தரப்பிலும் தகவல்கள் பரிமாற்றத்தில் குழப்பம், சிக்கல் உருவாகும் சூழல் நிலவியது.
இதை தவிர்க்கும் பொருட்டு, நேர்காணல் அறை சில வசதிகளுடன் நவீனமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒவ்வொரு கைதிகளுடன் பேச 10 நிமிடம் ஒதுக்கப்படுவது போன்று, நடைமுறை உள்ளது. இன்டர் காம் மூலம் சத்தமின்றி நேரில் பேசுவது போன்று பேசலாம். ஒரே நேரத்தில் 17 கைதிகள் வரை பேச முடியும்” என்றனர்.