மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம் இன்று முதல் (28ஆம் தேதி) டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்களின் நலன் கருதி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் வருகிற 28/11/2022 திங்கட்கிழமை முதல் 31/12/2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்கள் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 05:15 வரை இந்த சிறப்பு முகாம் செயல்படும். பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பு முகாம் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் 31/12/2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமமும் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.