4 ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

சபரிமலை : கேரளாவில், 2018ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின், இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் துவங்கியுள்ளன. இங்கு 2018ல் பெருமழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, பெண்கள் சபரிமலை வரும் பிரச்னை, கொரோனா பரவல் போன்ற காரணங்களால், நான்கு ஆண்டுகளாக இப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து, இந்த பாதையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடுக்கி சப் – கலெக்டர் அருண் எஸ்.நாயர் தலைமையில் வருவாய், வனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இந்த பாதையில் நேற்று ஆய்வு செய்தனர். வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், உப்புதரை புல்மேடு வழியாக 16 கி.மீ., துாரம் நடந்து சன்னிதானம் வந்தனர்.

வழிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இப்பாதையில் உள்ள இயற்கை அருவியான உரக்குழி தீர்த்தத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த பாதையில் பக்தர்கள், காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை சத்திரம் செக்போஸ்ட் தாண்டி செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்பின் வரும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆறு இடங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

புல்மேடு மற்றும் உப்புத்தரையில் மெடிக்கல் மற்றும் சிறிய கடை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சத்திரம் வரை தங்கள் வாகனங்களில் வந்த பின் நடந்து செல்ல வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.