புதுடில்லி: அதிமுக பொதுக்குழு வழக்கை டிச.,11ல் விசாரிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், டிச.,6ல் கட்டாயம் விசாரணை நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு தடைவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதன் விசாரணையில், தீர்ப்பிற்கு தடை விதிக்க கூடாது என்றும், முடிவு எட்டப்படும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சுதான்சு தூலியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. டிச.,6ல் அடுத்த விசாரணை நடக்க இருக்கிறது.
இதற்கிடையே பொதுக்குழு வழக்கை டிசம்பர் 11ல் விசாரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மாறாக, கட்சி காரியங்கள் தடைபட்டுள்ளதால் வழக்கை கட்டாயமாக வேறு தினத்திற்கு ஒத்தி வைக்க கூடாது. டிச.,6ல் வழக்கு விசாரணை கட்டாயம் நடைபெற வேண்டும் அதனை உறுதி செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பிலும் முறையிட்டனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், டிச.,6ல் கண்டிப்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், அன்றைய பட்டியலில் இருந்து வழக்கை மாற்றக்கூடாது என பதிவாளருக்கு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement