அனைத்து பழியையும் ஆளுநர் மீது போட்டு தப்பிக்க முடியாது – திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் இன்று (நவ. 29) சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,”செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு, மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறியதை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கியிருக்கிறோம்.

தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.  மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் திட்டத்தில் மாநில அரசு ஏராளமான முறைகேடு செய்திருப்பதை ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து வழங்கியிருக்கிறோம். 

ஆளுநரிடம் தமிழகம் முழுவதும் லஞ்சம் அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதிலும், சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை. 

சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி. சட்டத்தின் மீதான சில சந்தேகங்களையும்  மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் சாதாரண மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என சொல்லுவதற்கு கூட இங்கு தயங்குகின்றனர்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது. ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு அரசாணையைக் கூட மாநில அரசு பிறப்பிக்கவில்லை” என குற்றஞ்சாட்டினார். 

ஆளுநர் பதவி காலாவதியான பதவி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை,”எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டை கிழிந்த நிலையில், மு.க. ஸ்டாலின் சந்தித்த முதல் நபர் ஆளுநர்தான் என்பதை கனிமொழி கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.