தேனி: ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பினால் தேனி புறவழிச்சாலை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை வரை நகருக்குள் செல்லாமல் மாவட்டத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. இருப்பினும் புறவழிச் சாலை வசதி இல்லாததால் வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள்ளே வந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் நெரிசல் அதிகரித்ததுடன் சிறு விபத்துக்களும் அதிகரித்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த 2010-ல் ரூ.333.18கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி புறநகர் பகுதியில் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிகள் முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் இடையூறு, கரோனா, நீதிமன்ற வழக்கு, ஒப்பந்தப் பணியில் தாமதம் என்று பல்வேறு காரணங்களினால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே ஆங்காங்கே இப்பணி முழுமை அடைந்தது. இதனால் தேவதானப்பட்டி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட புறவழிச்சாலைகள் படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து உப்பார்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைத்து அக்.1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இருப்பினும் இந்த வழித்தடத்தின் பிரதான பகுதிகளான பெரியகுளம், தேனி புறவழிச்சாலை பணிகள் முழுமையடையாததால் நகரைக் கடக்கும் வாகனங்கள் உள்ளூர் சாலைகளையே பயன்படுத்தும் நிலை இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் பெரியகுளம் அருகே எண்டப்புளி எனும் இடத்தில் நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து அப்பகுதி வீடுகள் இடிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டன. அங்கு சாலை அமைத்ததைத் தொடர்ந்து பெரியகுளம் புறவழிச்சாலையும் பயன்பாட்டுக்கு வந்தது.
தேனி புறவழிச்சாலையைப் பொறுத்தவரை வாழையாத்துப்பட்டி அருகே ரயில்வே வழித்தடம் குறுக்கிடுவதால் மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது இப்பணி முடிவடைந்திருந்தாலும் சாலையோர தடுப்புச்சுவர், சாலைகளில் குறியீடு அமைத்தல், ஒளிபிரதிபலிப்பான் பொருத்துதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்கள் தேனி வழியே அதிகளவில் கடந்து சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து நகர நெரிசலை குறைப்பதற்காக தேனி புறவழிச்சாலை நேற்று முதல் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் நுழைவு பகுதியான தேவதானப்பட்டி முதல் எல்லைப்பகுதியான கூடலூர் வரை எந்த நகருக்குள்ளும் செல்லாமல் புறவழிச்சாலையிலே வாகனங்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், தேனி புறவழிச்சாலைப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. இருப்பினும் நகர நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிகமாக இப்பாதை திறக்கப்பட்டுள்ளது. வாழையாத்துப்பட்டி மேம்பால சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கவில்லை. தொடர்மழையினால் அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆகவே வாகனங்கள் இப்பகுதியை கவனமாக கடந்து செல்ல வேண்டும் என்றனர்.
இருப்பினும் இச்சாலையில் வாகன பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் விளக்குகள் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. ஆகவே இரவு நேரங்களில் இந்தவழியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.