ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்தம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் அட்மிஷன், டியூசன் கட்டணம், பராமரிப்பு கட்டணம் என கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனால், மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் பயனடைந்து வந்தனர். அந்த வகையில், இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாலும், மத்திய சமூகநல மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதையும் பின்பற்றி சிறுபான்மை மாணவர்களுக்கும் அதே முறையைப் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.