சபரிமலை: பக்தர்களுக்கு ஸ்டீல் பாட்டிலில் நோய் தடுப்புமருந்து கலந்த தூய குடிநீர் விநியோகம்!

சபரிமலை பெரிய நடைப் பந்தலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்டீல் பாட்டில்களில் நோய் தடுப்பு மருந்து கலந்த கட்டணமில்லா தூய குடிநீர் விநியோகம் துவங்கியது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 16-ம் தேதி முதல் தினசரி பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் இரவு பகலாக சபரிமலையின் பெரிய நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குடிநீருக்கான வாட்டர் பாட்டில்கள் அனுமதிப்பது இல்லை. தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் குடிநீர் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று மீண்டும் வந்து வரிசையை பிடிப்பதில் அதீத சிரமம் உள்ளது.
image
இதைக் கருத்தில் கொண்டு தரிசனத்திற்கு காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களின் தாகம் தீர்க்க, ஸ்டீல் பாட்டில்களில் நோய் தடுப்பு மருந்து கலந்த கட்டணமில்லா தூய குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்டீல் பாட்டில்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார்.
பெரிய நடைபாதையில் ஐயப்ப பக்தர்களுக்கு புதிதாக 500 ஸ்டீல் பாட்டில்களில் மருந்து கலந்த தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் குடிநீர் பருகியதும் ஸ்டீல் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு கொதிகலன்களில் இட்டு சுத்திகரிக்கப்பட்டு திரும்பவும் குடிநீர் வழங்கப்படுகிறது.
அதிகரித்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய சன்னிதானம் செல்லும் வழியிலும், சபரிமலை சன்னிதானத்தின் பல்வேறு இடங்களிலும் நோய் தடுப்பு மருந்து கலந்த கட்டணமில்லா குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.