சென்னை: சென்னை – பெங்களூரு இடையில் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பல்வேறு வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக, ‘வந்தே பாரத்’ ரயில் இயங்கும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது.
இதைத் தவிர்த்து சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம் – மங்களூரு வழித்தடத்தில் 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.