தமிழகத்தில் இயங்கும் பல்வேறு ரயில்களின் வேகத்தை உயர்த்துவதற்கான பணிகளை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கொல்லம், திருவந்தபுரம் என கேரளாவுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழித்தடங்களில் செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்பொழுது 110 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு இடையிலான வழித்தடத்தில் தேஜாஸ் மற்றும் வைகை விரைவு ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை 130 கிலோமீட்டராக உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று அரக்கோணம் – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – போத்தனூர் சென்னை – மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் 110 கிலோமீட்டராக இருக்கும் வேகத்தை 130 கிலோமீட்டராக உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.