தமிழை 2வது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த முயற்சி – ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த அம்மாநில முதல்வர்களோடு பேசி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், திருக்குறளை மற்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் சிறப்பு விருதுநராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ”இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்ட பெருமை தமிழகத்தை பெரிதும் சாரும். புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது. திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். கற்பிக்கும் முறை தற்போது மாறி வருகிறது. பழைய கற்பிக்கும் முறை போதுமானது இல்லை. மாணவர்கள் என்பவர்கள் ஆலமர விதை போன்றவர்கள். அதை கண்டறிந்து பெரிய மரமாக வளர ஆசிரியர்கள் உதவிட வேண்டும்.
image
நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை நாடு நீண்டகாலமாக அறிந்துள்ளது. தாய்மொழியில்தான் அறிவை வளர்க்க முடியும். திருக்குறள் அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் வைக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2-வது மொழியாக கொண்டு வர அம்மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அதே போல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு 13 இந்திய மொழியில் திருக்குறளை வெளியிட்டார். இது தமிழுக்கு பிரதமர் செய்த பெருமிதம் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.